புதுடெல்லி: கடந்த ஜனவரி மாதத்தில் 8.96 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் என பிஎப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிஎப் நிறுவனம் வௌியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஜனவரி மாதத்தில் 8.96 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்று, பிஎப் சந்தாதாரர்களாக இணைந்துள்ளனர். கடந்த ஆண்டு ஜனவரியில் இது 3.87 லட்சமாக இருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் ஜனவரியில் வேலை வாய்ப்பு 131 சதவீதம் அதிகரித்துள்ளது. இது 17 மாதங்களில் இல்லாத உயர்வாகும். கடந்த செப்டம்பர் 2017ல் இருந்து கடந்த ஜனவரி மாதம் வரை 76.48 லட்சம் பேர் பிஎப் நிறுவனத்தில் புதிய சந்தாதாரர்களாக இணைந்துள்ளனர். அதாவது, கடந்த 17 மாதங்களில் முறைப்படுத்தப்பட்ட துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் கடந்த டிசம்பர் மாதம் மட்டும் வேலை வாய்ப்பு 1.8 சதவீதம் குறைந்து 7.03 லட்சமாக இருந்துள்ளது. இது மதிப்பீடு செய்யப்பட்டதை விட குறைவு. கடந்த ஜனவரி மாதத்தில் வேலை வாய்ப்பு பெற்றவர்களில் 2.44 லட்சம் வேலை 22 – 25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கிடைத்துள்ளது. 18-21 வயதுக்கு உட்பட்ட 2.24 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் என பிஎப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.